அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை ‘கே’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து முன்னிலை வகித்தார்.
போட்டி தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜோயாவோ கேன்செலோ வழங்கிய பந்தை ரொனால்டோ கோலாக மாற்றினார். தொடர்ந்து 11வது நிமிடத்தில் நுனோ மெண்டஸ் கோல் அடித்து போர்ச்சுகலின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.
30வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தானின் கனியேவ் அடித்த கோல் ‘ஆஃப் சைடு’ என நிராகரிக்கப்பட்டது. பின்னர் புருனோ பெர்னாண்டஸ் உதவியுடன் ரொனால்டோ தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
58வது நிமிடத்தில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ வாய்ப்பை உருவாக்கினாலும், கோல் கீப்பர் நெமடோவ் பந்தை தடுத்து நிறுத்தினார். 60வது நிமிடத்தில் கிடைத்த கார்னரில் புருனோ அடித்த பந்து நெமடோவ் கையில் பட்டு வலைக்குள் சென்றதால் ‘சேம் சைடு’ கோலாக மாறியது. 87வது நிமிடத்தில் ரபேல் லியாவோ ஒரு கோல் சேர்க்க, போர்ச்சுகல் 5-0 என வெற்றியை உறுதி செய்தது.
மேலும், 2006ல் உலகக் கோப்பையில் அறிமுகமான ரொனால்டோ, தற்போது ஆறாவது முறையாக தொடரில் களமிறங்கி, தொடர்ந்து ஆறு உலகக் கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.





