தமிழ்நாடு சட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.

உரையை முடிக்கும் தருணத்தில், திமுக எம்எல்ஏக்கள் இருந்திருந்தால் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என தோன்றியதாகவும், அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் சபாநாயகர் அனுமதி அளித்தால் அதைச் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ‘முடித்து விட்டோம்’ என்பதைக் குறிக்கும் வகையில் முதல்வர் விஜய் கைச் சைகை செய்தார். இதேபோன்ற சைகையை சட்டசபைத் தேர்தல் காலத்தில் திமுக–காங்கிரஸ் கூட்டணி முடிவானபோது திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டது. இந்தச் சைகையை த.வெ.க. தரப்பினர் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

ஆனால், விஜய் செய்த சைகைக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இன்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், அந்த ‘பினிஷிங்’ சைகை சபையின் மாண்பையோ மரபையோ மீறியது அல்ல என்றும், நேற்று சட்டசபையில் மரபு மீறி எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார்.