அறுவை சிகிச்சையின் தந்தை என உலக மருத்துவ வரலாற்றில் போற்றப்படும் மகரிஷி சுஷ்ருதரின் வெண்கல சிலை, ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் வாழ்ந்த சுஷ்ருதர், மருத்துவத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிஞராகக் கருதப்படுகிறார். அவர் எழுதிய ‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற நூல், மருத்துவ அறிவின் முக்கிய ஆதாரமாக குறிப்பிடப்படுகிறது.

184 அத்தியாயங்களைக் கொண்ட அந்த நூலில், அறுவை சிகிச்சை மூலம் மனித உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் முறைகள் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,120 வகை நோய்கள் மற்றும் 700 மருத்துவ தாவரங்கள், விலங்கின அடிப்படையிலான கூறுகள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த சிலை உலகின் மிகப் பழமையானதும் புகழ்பெற்றதுமான ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பர்க்’ வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை ஸ்காட்லாந்துக்கான இந்திய துாதர் சித்தார்த் மாலிக் திறந்து வைத்தார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டனின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரா செருவு, தன் சொந்த செலவில் இந்த சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த சிற்பிகள் 90 கிலோ எடையுள்ள இந்த சிலையை வடிவமைத்து எடின்பர்க்குக்கு அனுப்பி வைத்தனர்.