ஆப்கானிஸ்தானில் ஈரான் எல்லையை ஒட்டிய ஹெராத் மாகாணத்தில், ஐ.நா. தொடர்புடைய மனிதாபிமான அமைப்புகளில் பணியாற்றிய 20 ஊழியர்களை தலிபான் ஒழுக்க நெறி போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆப்கான்–ஈரான் இடையிலான முக்கிய தரைவழி போக்குவரத்து மையமான இஸ்லாம் காலா பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உலக சுகாதார அமைப்பு (WHO), இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) உள்ளிட்ட அமைப்புகளின் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தலிபான் அரசு விதிகளின்படி ஆண்கள் முழுமையாக தாடி வளர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கைது செய்யப்பட்ட சிலர் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக தாடி வைத்திருந்ததாகவும், சிலர் முழுமையாக மழித்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மனிதாபிமான அமைப்புகளில் பணியாற்றுவோரும் தலிபான் சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரித்த பின்னர், கைது செய்யப்பட்டவர்களை சிறிது நேரத்திலேயே விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.