புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணமுல் காங்கிரசில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் மம்தா பானர்ஜியே தொடர்வதாக தேர்தல் கமிஷனுக்கு கட்சி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மம்தாவை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்து, புதிய தலைவராக அரூப் ராயை நியமிப்பதாக தெரிவித்தனர். அதேபோல், பொதுச் செயலர் பதவியில் அபிஷேக் பானர்ஜிக்கு பதிலாக ரிதபிரதா பானர்ஜி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

செய்தி விவரப்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. ரிதபிரதா பானர்ஜி தலைமையில் 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர் ஒரு அணியாக செயல்படுவதாகவும், லோக்சபா எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 எம்.பி.க்கள் தனி அணியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூன் 20 தேதியிட்ட கடிதத்தில் மம்தா தரப்பு தேர்தல் கமிஷனுக்கு, கட்சி தலைவர் மம்தா பானர்ஜியே எனத் தெரிவித்துள்ளது. மேலும் துணைத் தலைவர் சுப்ரதா பக்ஷி, பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி, இணைச் செயலர்கள் டெரெக் ஓ’பிரையன் மற்றும் டோலா சென், பொருளாளர் சுபாஷிஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

கட்சிக்கு இரு தரப்பும் உரிமை கோருவதால், தேர்தல் கமிஷன் எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.