தமிழகம்–கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு உரிய காவிரி பங்கீட்டு நீரை நிலுவையின்றி முழுமையாக திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் (CWMA) தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

டில்லியில் நேற்று நடைபெற்ற ஆணையத்தின் 52வது கூட்டம், தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடந்தது. இதில் தமிழக நீர்வளத் துறை முதன்மை செயலர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகை நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மற்றும் படுகை மாநிலங்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக நீர்த்தேக்கங்களிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அணைகளில் நீர் குறைவாக இருப்பதாக கூறி தொடர்ந்து காரணம் சொல்லுவதை ஏற்க முடியாது என்றும் தமிழக தரப்பு தெரிவித்தது.

ஜூன் மாத ஒதுக்கீட்டான 9.19 டி.எம்.சி. மற்றும் ஜூலை மாத ஒதுக்கீட்டான 31.24 டி.எம்.சி. நீரை பில்லிகுண்டுலுவில் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரியது. இதற்கு, போதிய மழையின்மை மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து குறைவு காரணமாக கூடுதலாக நீர் விடுவிக்க இயலாது என்று கர்நாடகா தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலனைக்கு எடுத்த ஆணையம், தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான பங்கீட்டு அளவை இறுதி செய்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பேசப்படவில்லை.