போபால்: மத்திய பிரதேசத்தில், முக்கிய சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அமைய உள்ள பகுதிகளில் உஜ்ஜயின் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் முதல்வர் மோகன் யாதவின் குடும்பத்தினர் பெருமளவில் நிலங்களை வாங்கி குவித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ரூ.45 கோடி மதிப்பில் நடந்ததாக கூறப்படும் நில வாங்குதல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள், மோகன் யாதவ் 2023-ல் முதல்வராக பொறுப்பேற்கும் சில மாதங்களுக்கு முன் வெளியான “உஜ்ஜயின் மாஸ்டர் பிளான்” பின்னணியில் எழுந்துள்ளன. அந்த திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கு மாற்ற அரசு அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் கூறுவதாவது, மோகன் யாதவ் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அவரது குடும்பத்தினரும், அவர்களுடன் தொடர்புடைய நான்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் உஜ்ஜயின் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 137 நிலப் பிரிவுகளாக மொத்தம் 168 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதில் 111 ஏக்கர் நிலங்கள் அரசு அறிவித்த முக்கிய சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு மிக அருகாமையில் இருப்பதால், நில மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நில வாங்குதல்களில் முதல்வரின் மனைவி சீமா யாதவ், மருமகள் ஷாலினி யாதவ், சகோதரர்கள் நந்தலால் மற்றும் நாராயண் யாதவ், உறவினர்கள் கோவிந்த் மற்றும் நீலேஷ் யாதவ் ஆகியோர் தொடர்புடையதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்திடம் முன்பு இருந்ததாக கூறப்படும் 100 ஏக்கர் நிலம் தற்போது 335 ஏக்கராக உயர்ந்தது எப்படி என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மற்ற எதிர்க்கட்சிகளும் முதல்வர் பதவியில் இருந்து மோகன் யாதவ் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஆனால், பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். முதல்வரின் உறவினரான அனந்த் யாதவ், குடும்பம் 2010 முதலே ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பதாகவும், பல ஒப்பந்தங்கள் அவர் முதல்வராவதற்கு முன்பே தொடங்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார். உஜ்ஜயினில் விரைவில் சிம்ஹஸ்தா கும்பமேளா நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.





