சென்னையில் நடைபெற்ற அரசு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், நிறைமாத கர்ப்பிணியான தேர்வாளருக்கு மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் நேரில் பணி நியமன ஆணை வழங்கிய நிகழ்வு கவனம் பெற்றது.

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அப்போது மேடைக்கு கீழே இருந்த அக்சய லட்சுமியை கவனித்த முதல்வர் விஜய், அவரிடம் சென்று நேரடியாக ஆணையை வழங்கினார் என தெரிவிக்கப்பட்டது.

மேடைக்கு அழைக்காமல், அவரிடம் சென்று வழங்கிய இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

விழாவில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 25 ஆண்டுகளாக சீரழிந்து கிடக்கும் துறையை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறி, ஒரே ஆண்டில் 15,000 பேரை வேலைக்கு எடுப்பதாக அறிவித்தார். மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்க 30 நிமிடங்களில் முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் மின்துறை உருக்குலைந்ததாக குற்றம்சாட்டிய அமைச்சர், மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை அடுத்த நாள் வெளியிடப்படும் என்றார். தற்போது பயன்பாட்டில் உள்ள மின்மாற்றிகளில் 25% பழமையானவை என்றும், 20 ஆண்டுகள் பழைய மின்மாற்றிகளும் உள்ளன என்றும் அவர் கூறினார்.