அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் ஆதரவாளர்களுடன் ஜூன் 29 அன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைப்பு நிகழ்ச்சியை சென்னையில் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாகவே, பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்யபாமா, மதுராந்தகம் மரகதம், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் மாவட்ட செயலர்கள் முதல் கிளை செயலர்கள் வரை பலரும் தவெகவுக்கு நகர்ந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

விராலிமலை எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கடந்த வாரம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் தவெகவில் இணைப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தவெக மூத்த நிர்வாகி ஒருவர், அவர்மீது உள்ள வழக்குகள் காரணமாக முதலில் தயக்கம் இருந்ததாகவும், பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட அழுத்தத்தையடுத்து ஒப்புதல் கிடைத்ததாகவும் தெரிவித்ததாக செய்தி கூறுகிறது.

மேலும் அதிமுகவில் இருந்து முக்கிய நபர்களை இழுத்துவரும் பொறுப்பு சி.விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி கரூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தவெகவில் சேரும் முன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 29 நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டை மற்றும் கரூரில் இருந்து 10,000க்கும் அதிகமானோரை சென்னைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல். இதே நேரத்தில், மேலும் சில முன்னாள் அமைச்சர்களுடனும் பேச்சு நடப்பதாகவும், குறிப்பாக அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியுடன் மோதல் போக்கில் உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகம் தொடர்பாக தவெக மேலிடம் வழியே பேச்சு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.