சாலை தரம் உயர்த்தும் பணிகளில் ரூ.3.20 கோடி அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.
புகாரின் படி, 2022ஆம் ஆண்டு சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமலேயே செய்ததாகக் காட்டி, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு ரூ.3.20 கோடி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்துள்ளது.
அந்த மனுவில், கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சாலை பகுதிகளை தரம் உயர்த்த ரூ.4.19 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் எந்தப் பணிகளும் செய்யாமல் ரூ.3.20 கோடி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அளித்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாகவும் புகார் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் புதன்கிழமை காலை முதல் சென்னை, கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை தொடங்கியுள்ளது. எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் ரெய்டுகள் நடைபெறுவதாகவும், கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டிலும் சோதனை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.





