புதுடில்லி: தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்படும் 20% எத்தனால் கலந்த ‘இ-20’ பெட்ரோல் காரணமாக வாகன காப்பீட்டு கோரிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

எத்தனால் கலப்பு திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதாகவும், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தி வாகனத்தில் கோளாறு ஏற்பட்டால் காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்ற தகவல்கள் பரவுவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டது. அந்த தகவல்களில் உண்மை இல்லை எனத் தெளிவுபடுத்தியது.

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. பிரேசிலில் 27% எத்தனால் கலப்புடன் பெட்ரோல் வினியோகிக்கப்படுவதாகவும், இந்தியாவில் தற்போது 20% கலப்பு நடைமுறையில் இருப்பதாகவும் கூறியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய தரப்புகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் அமைச்சகம் கூறியது. மேலும், எத்தனால் கலப்பு திட்டம் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு குறைந்ததால் 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

எத்தனால் உற்பத்திக்கான வேளாண் மூலப்பொருட்களுக்கு நிலையான தேவை உருவாகி, விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியது. அறிவியல் ஆதாரங்கள் மற்றும் நிபுணர் ஆலோசனைகளின் அடிப்படையில், நுகர்வோர் நலனை மையமாக வைத்து இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தது.