சென்னை
லஞ்ச வழக்குகளில் சிக்கியுள்ள சார்-பதிவாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் சொத்து விவரங்கள் குறித்து அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தினர். ஜூன் 4-ம் தேதி சார்-பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையில் 46 இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், ஜூன் 18-ம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடத்தி ரூ.37.81 லட்சம் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், சென்னை வளசரவாக்கம், சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் குறித்து ED விசாரிக்கிறது.
மேலும், சென்னை விருகம்பாக்கம், செம்பியம், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மற்றும் சேலம் ஆகிய சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் சொத்து விவரங்களும் ஆய்வில் உள்ளன.





