கரூரில் நடந்த வருமான வரித்துறை சோதனை சம்பவத்தைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மதுரை கிளை உயர் நீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
அரசுத் தரப்பு கூறுகையில், 2023 மே 26-ஆம் தேதி செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அங்கு வந்த தி.மு.க.வினர் அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்து, தவறான வார்த்தைகளால் திட்டி, லேப்டாப் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றதாக கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்தது.
இந்த வழக்கில் அசோக்குமார் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அரசியல் உள்நோக்கில் தாமதமாகவும் தவறாகவும் தனது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சம்பவ நேரத்தில் தாம் அங்கு இல்லை; தூண்டியதாக கூறி வழக்கில் இணைத்துள்ளனர் என்றும் அவரது தரப்பு வாதிட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், நீதிபதி பி.தனபால், வழக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போது நடவடிக்கை எடுக்காமல் இப்போது மட்டும் போலீசார் தீவிரம் காட்டுவது ஏன் என்றும், கொலை வழக்குகளில்கூட மறுநாள் பதில் மனு தாக்கல் செய்யப்படும் நிலையில் இவ்வழக்கில் அவகாசம் கேட்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விசாரணை இன்று நடைபெறுமாறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.





