தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், தங்களின் அறிவிப்பு/விளம்பர பலகைகளில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
மே 25 அன்று தமிழக மாநில தகவல் ஆணையம், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை அனைத்து தனியார் பள்ளிகளும் பள்ளி பலகைகளில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 1 அன்று தனியார் பள்ளிகள் துறை இயக்குநர், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பல்வேறு வாரிய பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, ஜூன் 5க்குள் கட்டண விவரங்களை பலகையில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவும், அதனைத் தொடர்ந்து வெளியான இயக்குநரின் சுற்றறிக்கையும் ரத்து செய்யப்பட வேண்டும் என அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுச்செயலர் கே. பழனியப்பன் மனுத் தாக்கல் செய்தார்.
நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணை நடந்தபோது, கட்டண விவரங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில் பள்ளிகளுக்கு என்ன சிரமம் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.





