தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும், ஓட்டுத் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டி கூட்டணி சார்பில் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைமுறைகள் குறித்தும் அந்தக் கடிதத்தில் கவலை தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜூன் 8-ம் தேதி டில்லியில் இண்டி கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் 23 கட்சித் தலைவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது; சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பங்கேற்றனர். ஆனால் திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சார்பில் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

அக்கூட்டத்தில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோருதல், பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இண்டி தலைவர்கள் ஆலோசனை நடத்துதல், மழைக்கால கூட்டத் தொடரில் சபைக்குள் ஒருங்கிணைந்து செயல்படுதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தலைமை நீதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ள கடிதத்தில் இண்டி கூட்டணி தலைவர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டுவிட்டதாகவும், திமுகவை அணுகியபோது முதலில் பதில் வரவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. பின்னர் மூத்த எம்.பி.க்கள் வழியாக பேசப்பட்டபோது, கடிதத்தில் கையெழுத்திட திமுக தலைமையிடம் விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடிதம் அடுத்த வாரம் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்குள் திமுக சம்மதிக்க வாய்ப்பு இருப்பதாக சில இண்டி தலைவர்கள் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.