வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில், மருத்துவ உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ.900 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் பெண் மருத்துவ அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகுப்பத்தை சேர்ந்த ரங்கன் (40) - ரவீனா (32) தம்பதியருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான உடற்தகுதி சான்றிதழ் பெற ஜூன் 22 அன்று ரவீனா, மருத்துவ அலுவலர் வெங்கடலட்சுமியை அணுகியதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒருவருக்கு ரூ.300 வீதம் மூவருக்கும் சேர்த்து ரூ.900 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீனா, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய பணத்தை ரவீனா நேற்று முன்தினம் சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த வெங்கடலட்சுமியிடம் வழங்கினார். மறைந்திருந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெங்கடலட்சுமியை கைது செய்தனர்.





