பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்த கடன் வசூல் வழக்கில், நிலுவைத் தொகை மற்றும் வட்டி சேர்த்து ரூ.100 கோடியை செலுத்துமாறு வைர வியாபாரி நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த நிரவ் மோடி, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் வைர நகை விற்பனையில் ஈடுபட்டிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கட்டங்களில் சுமார் ரூ.13,000 கோடி கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டன் தப்பியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இன்டர்போல் உதவியுடன் லண்டனில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது பிரிட்டன் சிறையில் உள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இந்தியாவுக்கு வந்ததும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நிரவ் மோடியின் பயர்ஸ்டார் குழுமத்துக்குட்பட்ட துபாயில் செயல்பட்ட ‘பயர்ஸ்டார் டைமண்ட் எப்.ஸீ.இ.’ நிறுவனத்துடன் தொடர்புடையது. அந்த நிறுவனத்திற்கு 2012-ல் பேங்க் ஆப் இந்தியா பல கோடி ரூபாய் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது; அதற்கு நிரவ் மோடி தனிநபர் உத்தரவாதம் அளித்திருந்தார்.

நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், வங்கி முதலில் ரூ.40 கோடி நிலுவையை வசூலிக்க முயன்றதாகவும், பின்னர் அது வட்டியுடன் ரூ.100 கோடியாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லண்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முழுத் தொகையையும் பேங்க் ஆப் இந்தியாவுக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.