சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு செயலர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று, துறை தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள அமைச்சர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

த.வெ.க. அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் செங்கோட்டையனைத் தவிர மற்ற 33 பேரும் புதியவர்கள். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் முடிவடைந்துள்ளது.

ஜூலை இரண்டாவது வாரத்தில் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளன. அந்த நேரங்களில் துறை வாரியாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

சமீபத்தில் நடந்த கவர்னர் உரை விவாதத்தில் சில அமைச்சர்கள் மட்டுமே கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில், பெரும்பாலானோர் பதிலளிக்கவில்லை. மானியக் கோரிக்கை விவாதங்களில் அதுபோல் தவிர்க்க முடியாததால், பல அமைச்சர்கள் தங்கள் துறையைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் துறை செயலர்களை சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.