சட்டசபை விவாதங்களில் அரசியல் விமர்சனம் இடம்பெறுவது இயல்பானது என்றும், அதை சட்டசபையிலேயே பேசாமல் வேறு எங்கு பேச முடியும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது கருத்துகளை முன்வைத்து பதிலளிப்பதில் தவறு இல்லை என்றார்.
சட்டசபையில் முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இத்தகைய அரசியல் விமர்சனங்கள் சட்டமன்றத்தில் நடைபெறுவது இயல்பானதே என்றார். எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும்; ஆளுங்கட்சியும் பேசட்டும்; இதில் தவறு ஒன்றும் இல்லை என அவர் கூறினார்.
கடன் வாங்குவது தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். கடன் மூலம் பொதுமக்களுக்கு நீண்டகால பயன் தரும் சொத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி, மருத்துவமனை, தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவை 50–60 ஆண்டுகள் நிலைத்து வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பலன்களை உருவாக்கும் என்றும் அவர் விளக்கினார்.
மத்திய அரசு–மாநில அரசு ஒத்துழைப்பு குறித்து, தமிழகம் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் என கூறுவது வரவேற்கத்தக்கது என்றார். எந்த மாநிலத்திற்கும் அல்லது மாவட்டத்திற்கும் குறைவாக செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி எப்போதும் சொல்லவில்லை என்றும், முன்பிருந்த ஆட்சிக்காலத்திலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்பட்டதாகவும், தூத்துக்குடியில் பெரிய திட்டங்கள் கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை அமைப்பதற்கு மூன்று பட்ஜெட்டுகளுக்கு முன்பே மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக கூறினார். எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் மருத்துவக் கல்லூரி கட்டலாம்; அதனை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





