புதுடில்லி: பாஸ்போர்ட் என்பது அரசு வழங்கும் பயண ஆவணம்; குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவா தினத்தை முன்னிட்டு வெளியிட்ட தகவலில், ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பது மட்டும் அவரின் குடியுரிமைக்கான இறுதியான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
நாட்டில் பாஸ்போர்ட் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் 1.39 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பின் ஆறு வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 545 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.
குடியுரிமையை நிரூபிப்பதற்கான பொதுவான மற்றும் வலுவான ஆவணங்களாக பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் போன்றவை கருதப்படுகின்றன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.





