சீக்கிய மத குருமார்களின் புகைப்படங்கள் மீது மதுபானம் தெளித்ததாக கூறப்படும் வீடியோ விவகாரத்தில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவருக்கு சாதகமாக போலி தடயவியல் அறிக்கை தயாரிக்க ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான அந்த வீடியோவில் முதல்வர் மான் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதை திட்டவட்டமாக மறுத்தார். எதிர்க்கட்சிகள் தன் நற்பெயரை கெடுக்க சதி செய்கின்றன என்றும் கூறினார். இதற்கிடையில், சீக்கியர்களின் உயரிய அமைப்பான அகால் தக்த் இந்த சம்பவத்தை கண்டித்து மானுக்கு தண்டனையும் விதித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு உயர்மட்ட விசாரணை நடத்தி, தடயவியல் அறிக்கையை வெளியிட்டது. அதில், இரண்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்டதாகவும், வீடியோவில் இருப்பவர் மான் அல்ல; அவரைப் போல தோற்றமுடைய நபர் என்றும், முதல்வரை அவதூறாக காட்டவே போலி வீடியோ தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஹரியானாவின் குருகிராம் போலீசில் ஒரு தடயவியல் நிபுணர் புகார் அளித்தார். அதில், பஞ்சாப் போலீஸ் உயரதிகாரிகள் என கூறிய இருவர் தன்னை அணுகி, வீடியோவில் இருப்பவர் மான் இல்லை என அறிக்கை தரும்படி மிரட்டியதாகவும், சில போலி ஆய்வகங்களுடன் சேர்ந்து அறிக்கை தயாரிக்க வற்புறுத்தியதாகவும், ரூ.10 லட்சம் தருவதாக ஆசை காட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த குருகிராம் போலீசார் டில்லியைச் சேர்ந்த அங்கித் மற்றும் பஞ்ச்குலாவைச் சேர்ந்த அருண் ஆகியோரை கைது செய்தனர். பஞ்சாப் அரசு வெளியிட்ட தடயவியல் அறிக்கை போலியாக தயாரிக்கப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் லஞ்சம் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்ததாக செய்தி கூறுகிறது. பா.ஜ.க. தலைவர் மஜிந்தர் சிங் சிர்சா, சில பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் போலி அறிக்கைக்கு துணைபோனதாக குற்றம்சாட்டி, மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மான், ஹரியானா பா.ஜ.க. அரசு ஆய்வக உரிமையாளர்களை மிரட்டி பொய் சொல்ல வற்புறுத்துகிறது என்றும், பஞ்சாப் அரசு அறிக்கை துல்லியமானது என்றும் கூறி, முடிவை அகால் தக்த் அமைப்பிடமே விடுவதாக தெரிவித்தார்.