மத்திய பிரதேசத்தில் 2018 தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய கருத்து தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜஹூபா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில், அப்போது முதல்வராக இருந்ததும் தற்போது மத்திய அமைச்சராக உள்ளவருமான சிவராஜ் சிங் சவுகான், அவரது மகன் கார்த்திகேயா சவுகான் மற்றும் குடும்பத்தினர் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குடன் தொடர்புடையவர்கள் என ராகுல் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கூறி, போபாலில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திகேயா சிங் சவுகான் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து, ராகுல் வழக்கறிஞர் மூலம் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கார்த்திகேயா சிங்கை குறிப்பிட்டு பேசவில்லை என்றும், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





