தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதற்காக வி.சி.க. தலைவர் திருமாவளவன் சில நிபந்தனைகள் வைத்ததாகவும், அதனால் முதல்வர் விஜய் அதிர்ச்சியடைந்ததாகவும் த.வெ.க. அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் கூறுவதன்படி, த.வெ.க. அரசு தொடக்கத்தில் வி.சி.க. மற்றும் முஸ்லிம் லீக் நிபந்தனையற்ற ஆதரவு அளித்த நிலையில், பின்னர் அமைச்சரவையில் இணைந்தன. தற்போது சமூகநீதி துறையை மாற்றி வேறு துறை வழங்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழியாக திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், வி.சி.க. உள்ளிட்ட ஆதரவு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற வேண்டும் என த.வெ.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதன்படி காங்கிரஸ், இ.கம்யூ., முஸ்லிம் லீக் ஆகியவை வெளியேறியதாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வி.சி.க. வெளியேறும் விவகாரம் தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் சமீபத்தில் திருமாவளவனுடன் ஆலோசனை நடந்ததாகவும், அதில் த.வெ.க. முக்கியப் புள்ளிகள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில், துறை மாற்றம் குறித்த முடிவு, வி.சி.க.க்கு முக்கிய வாரியப் பதவிகள், மேலும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதாக கூறியதற்கு பதில் ஆகியவற்றில் தெளிவு கிடைத்த பிறகே தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதை அறிவிப்பேன் என்று திருமாவளவன் கறாராக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த ஆலோசனையிலும் இதே நிலைப்பாட்டையே அவர் வலியுறுத்தியதாகவும், முதல்வர் விஜய் தொலைபேசியில் பேசியபோதும் அவர் தளரவில்லை என்றும் கூறப்படுகிறது. துறை மாற்றம், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல், வாரியப் பதவிகள் என கோரிக்கைகள் நீளுவதால் முதல்வர் விஜய் அதிர்ச்சியடைந்ததாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.