தமிழ்நாடு மின்சாரத் துறையின் நிதி நிலைமை மற்றும் செலவின விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். கடந்த 25 ஆண்டுகளாக துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், மின் துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அறிக்கையில் காலகட்டங்களாக வருவாய், செலவு மற்றும் பற்றாக்குறை விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2001–2006ல் வருவாய் ரூ.59,084 கோடி; செலவு ரூ.67,439 கோடி; பற்றாக்குறை ரூ.8,355 கோடி. 2006–2011ல் வருவாய் ரூ.92,737 கோடி; செலவு ரூ.1,28,200 கோடி; பற்றாக்குறை ரூ.35,463 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011–2016ல் வருவாய் ரூ.1,92,971 கோடி; செலவு ரூ.2,49,332 கோடி; பற்றாக்குறை ரூ.56,361 கோடி. 2016–2021ல் வருவாய் ரூ.3,20,140 கோடி; செலவு ரூ.3,78,674 கோடி; பற்றாக்குறை ரூ.58,534 கோடி. 2021–2026ல் வருவாய் ரூ.4,97,996 கோடி; செலவு ரூ.5,32,443 கோடி; பற்றாக்குறை ரூ.34,447 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். கூடுதல் வருவாய் வந்தாலும் செலவினம் அதிகரித்ததாகவும், ஆனால் “முன்னேற்றத் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், தற்போது 74,714 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் 65,921 பேர் பற்றாக்குறையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அடித்தள வசதிகள் குறித்து, 2001ல் 1.35 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் இருந்ததாகவும், முந்தைய திமுக ஆட்சியில் 99,573 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டதாகவும் கூறினார். தற்போது மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதாகவும், பழைய டிரான்ஸ்பார்மர்கள் காரணமாக மின் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கூறி, 1.50 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.