ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சிக்கு இருந்த சோதனை காலம் முடிந்து “பனிக்காலம் கடந்தால் வசந்தம் வரும்” என்ற வகையில் இனி நல்ல காலம் தொடங்கும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற ஆதித்யா–ரமா திருமண வரவேற்பில் அவர் கலந்து கொண்டு பேசினார். தேர்தல் வெற்றி கிடைக்காத நேரங்களும் இருந்தாலும், அடிப்படை பிரச்னைகளில் தொடர்ந்து போராடி வந்ததாக அவர் கூறினார்.

முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதைத் தடுக்க எடுத்த முயற்சிகள் உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டார். மேகதாது அணை விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தது தங்களே என்றும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பல கட்சிகளை ஆலை நிர்வாகம் வளைத்ததாகவும், தன்னை மட்டும் வளைத்துக்கொள்ள முடியவில்லை என்றும் வைகோ கூறினார். மேலும், மோடி பிரதமராக பொறுப்பேற்ற நிகழ்ச்சிக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்ததைத் தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து விலகியதாகவும் நினைவூட்டினார்.

கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் போதுமான இடங்கள் வழங்கப்படவில்லை, தனி சின்னத்தில் போட்டியிட முடியவில்லை, கூட்டணியில் அங்கீகாரம் இல்லை என்ற மனவேதனையில் தொண்டர்கள் இருப்பதாக அவர் கூறினார். தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், சுயமரியாதை மற்றும் தன்மானத்தை காக்க பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.