வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தலைநகர் கராகஸில் உள்ள கட்டடங்களை குலுங்கச் செய்து, பல இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் நகரத்திற்கு மேற்கே சுமார் 28 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கத்தின் அளவு 7.1 முதல் 7.5 வரை பதிவாகி, சுமார் 13 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

சில நிமிட இடைவெளியில் இரண்டு வலுவான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கராகஸில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், கரீபியன் கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ பல கட்டடங்கள் சேதமடைந்ததை உறுதிப்படுத்தினார். இடிபாடுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்ததாகவும், 700 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.