ஆமதாபாத் விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு நடந்த சம்பவம், ஒரே ஓடுதளப் பாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
தகவலின்படி, 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, புறப்படுவதற்காக இண்டிகோ விமானம் அதே பாதையில் நுழைந்ததால் இரு விமானங்களும் நேருக்கு நேர் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக மாற்றுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தால் இண்டிகோ விமானத்தின் புறப்பாட்டில் சுமார் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ஆமதாபாத்–மும்பை விமானம் புறப்படுவதற்காக ஓடுதளப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு விமான நிறுவனத்தின் விமானம் எதிர்பாராதவிதமாக தங்களது பாதையில் வந்ததாக தெரிவித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மற்ற விமானம் மாற்றுப் பகுதிக்கு நகர்த்தப்பட்ட பின்னர், இண்டிகோ விமானம் புறப்பட்டு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.





