காஞ்சிபுரம் அருகே ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களை, பள்ளி சீருடையிலேயே, முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் சம்பவத்தை தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், த.வெ.க. நிர்வாகிகள் எப்படி இத்தகைய துணிச்சலுடன் பள்ளி மாணவர்களை அரசியல் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும், மாணவர்களை த.வெ.க. கொடிகள் கட்ட வைப்பது, அரசு பள்ளிக்குள் நுழைந்து பிறந்தநாள் வாழ்த்து பாட வைப்பது, ‘விஜய் வாழ்க’ என கோஷமிட வைப்பது போன்ற செயல்கள் நடந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

சிறு குழந்தைகளை “பணியாட்கள் போல்” நடத்த யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் காலத்திலும் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதே போக்கு இப்போது தொடர்வதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற அராஜகங்கள் நடைபெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.