ஸ்காட்லாந்தை எளிதில் கடந்து பிரேசில்

மயாமியில் நடந்த குரூப் சி லீக் போட்டியில் பிரேசில் அணி ஸ்காட்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 7வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார்; முதல் பாதி கூடுதல் நேரத்தில் (45+3) இரண்டாவது கோலையும் பதிவு செய்து முன்னிலையை வலுப்படுத்தினார்.

60வது நிமிடத்தில் மத்தேயஸ் குன்ஹா மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டியில் புரூனோ கிமரேஸ் இரண்டு கோல்களுக்கு அசிஸ்ட் செய்து கவனம் ஈர்த்தார்.

காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத நெய்மார், 75வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கினார். இந்த வெற்றியால் பிரேசில் குரூப் சியில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஹைட்டியை வீழ்த்தி மொராக்கோ த்ரில் வெற்றி

குரூப் சியின் கடைசி லீக் போட்டியில் மொராக்கோ அணி ஹைட்டியை 4-2 என வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 10வது நிமிடத்தில் லென்னி ஜோசப் அடித்த பந்து கோல்கீப்பர் யாசின் போனோ மீது பட்டு ஓன் கோலாக மாறி ஹைட்டி முன்னிலை பெற்றது.

39வது நிமிடத்தில் மொராக்கோ கேப்டன் அஷ்ரப் ஹக்கிமி சமனாக்கினார். ஆனால் 43வது நிமிடத்தில் வில்சன் இசிடோர் கோல் அடித்து ஹைட்டியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு சென்றார். முதல் பாதி கூடுதல் நேரத்தில் இஸ்மாயில் சைபாரி கோல் அடிக்க, இடைவேளைக்கு 2-2 சமனில் சென்றது.

இரண்டாம் பாதியில் 70வது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த சூபியான் ரஹிமி, 78வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து 3-2 என மொராக்கோவை முன்னிலைப்படுத்தினார். 89வது நிமிடத்தில் ரஹிமி வழங்கிய அசிஸ்ட்டை மற்றொரு மாற்று வீரர் கெசைம் யாசின் கோலாக மாற்றி 4-2 வெற்றியை உறுதி செய்தார்.