விண்வெளி செயல்பாடுகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், “விண்வெளிக் கழிவுகள் இல்லாத” செயற்கைக்கோள் பயணத் திட்டங்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி முகமைகள் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

இந்தியாவின் தலைமையில் பெங்களூருவில் பிரிக்ஸ் விண்வெளி முகமைகள் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இக்கூட்டத்தில் நடந்த விவாதங்கள் இந்தியாவை உலகளாவிய அளவில் மேலும் முன்னேற்றும் என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் மொத்த விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருவதாகவும், இன்று இந்தியா விண்வெளி செயல்பாடுகளில் முன்னணி இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சமூக-பொருளாதார நலனுக்காக பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றக் கண்காணிப்பு உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் கூட்டமைப்பை பயன்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தெரிவித்தார்.

எதிர்கால விண்வெளிப் பயணங்களின் நிலைத்தன்மைக்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்டதாக கூறிய அவர், விண்வெளிக் கழிவுகள் உருவாகாமல் தடுக்கும் வகையிலான செயற்கைக்கோள் பயண மேலாண்மை அமைப்புகள் குறித்த விவாதங்களும் நடந்ததாகவும், இது பயனுள்ள கூட்டமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.