பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதியற்ற பேனர்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்களுக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை இருந்தாலும், கட்சியினரின் அழுத்தம் காரணமாக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி எல்லைக்குள் பழைய பேருந்து நிலையம், ராட்டினங்கிணறு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தலைவர்கள் பிறந்தநாள், அமைச்சர்கள் வருகை போன்ற காரணங்களுக்கும், தனியார் வணிக விளம்பரங்களுக்கும் பேனர்கள் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதிகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் நகராட்சியில் தேரடி தெரு, பஜார் வீதி, உக்கம்சந்த் சாலை, மும்முனை சாலை சந்திப்பு போன்ற இடங்களில் வாகன ஓட்டிகளை திசைதிருப்பும் வகையில் பேனர்கள் புற்றீசல் போல முளைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் கட்சியினர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக பெரிய பேனர்கள் வைப்பதாகவும், இதனால் பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு விபத்து அபாயம் அதிகரிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பெரிய விபத்துகள் நிகழ்வதற்கு முன் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.