தமிழக சட்டசபையின் மரபும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு நாங்கள் நெருக்கடி தர மாட்டோம்; அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது பொதுக்கூட்ட பேச்சு போல இருந்ததாகவும், அவையில் சைகை காட்டுவது தவறு என்றும் அவர் விமர்சித்தார். மேலும், “அப்பாவை காணோம்” என்று சட்டசபையில் முதல்வர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

அதேபோல், முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதும் ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். பண்பு தவறிய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்; வெற்றியும் தோல்வியும் மாறக்கூடியவை என்பதால் தோற்றவர்களை தாழ்வாக பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

முதல்வராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி—யாரும் யாரையும் தாழ்வாகப் பார்க்கக் கூடாது என்று வீரபாண்டியன் கூறினார்.