கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று கடுமையாக தெரிவித்தார்.

திரிணமுல் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பாஜவின் அரசியலுக்கு மத்தியில் கட்சியினர் இடைவிடாது பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்கள் மீது அடக்குமுறை வழியாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அதனால் மக்கள் கடும் மனஅழுத்தத்திற்கு தள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பலர் அச்சத்தில் வாழ்கிறார்கள்; வேலைகளை இழந்து கனவுகளும் சிதைந்துள்ளன என்றும் அவர் கூறினார். இத்தகைய நெருக்கடியில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஒற்றுமையான திரிணமுல் கட்சியே முடியும் என்றார்.

கட்சியை விட்டு சென்றவர்களை “துரோகிகள்” என குறிப்பிட்ட மம்தா, கட்சியை வளர்த்த தாயுடன் ஒப்பிட்டு பேசினார். தாயின் உடல்நலம் சரியில்லாத போது கவனிக்க மறுப்பது போல சிலர் நடக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். அவர்கள் இப்போது தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்; ஆனால் இறுதியில் மக்கள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.