மும்பை புறநகர் ரயிலில் பெட்டிக் கதவை மூடுவது தொடர்பான தகராறில், 21 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
பால்கர் மாவட்டம் விரார் பகுதியைச் சேர்ந்த மயங்க் லோஹர் (21) அந்தேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சர்ச் கேட்–நலசோப்ரா புறநகர் விரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் லோஹர் பயணித்தபோது, ரோஷன் சுவர்னா என்பவரும் உடன் இருந்ததாக போலீசார் கூறினர். கோரேகான்–காந்திவாலி இடையே ரயில் சென்றபோது கனமழை பெய்த நிலையில், கதவை மூடுவது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் அங்கிருந்த சிலர் ரோஷனை தாக்க முயன்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்த ரோஷன் தனது பையில் இருந்து கத்தியை எடுத்து லோஹரின் வயிற்றில் தொடர்ச்சியாக குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் லோஹர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்ற பயணிகள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.
ரயில் இரவு 11:04 மணியளவில் போரிவாலி நிலையம் வந்தபோது ரோஷன் குதித்து தப்பியோடியதாக தகவல். சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.




