தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல்களுக்கு சிறப்பு தீவிர மறுஆய்வு செய்ய உத்தரவிட்டதன் ஓராண்டுக்குப் பிறகு, 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (எஸ்ஐஆர்) குறித்து என்.சி.இ.ஆர்.டி. தனி அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது.

அதே பாடப்புத்தகத்தில், 1975ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய நெருக்கடி நிலை தொடர்பான பாடமும் இடம்பெற்றுள்ளது. தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020ன் கீழ் பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்படும் முக்கிய மாற்றங்களின் ஒரு பகுதியாகவும், சமகால வரலாறு குறித்த மாணவர்களின் புரிதலை வலுப்படுத்தவும் இவை சேர்க்கப்பட்டதாக என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆர் அத்தியாயத்தில், வாக்காளர் பட்டியலைப் புதுப்பித்தல், பதிவுகளைச் சரிபார்த்தல் மற்றும் பிழைகளைத் திருத்துதல் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள எந்த வாக்காளரும் வாக்குரிமையை இழக்காமல் இருப்பதும், தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்படுவதாக விளக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதும், காலமானவர்கள், முகவரி மாற்றியவர்கள் மற்றும் ஒரே நபர் பலமுறை இடம்பெற்றுள்ள பதிவுகள் நீக்கப்படுவதும் கூறப்பட்டுள்ளது. இதனுடன் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரங்கள் போன்ற நடவடிக்கைகளும் பாடத்தில் இடம்பெற்றுள்ளன.