தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், தலைநகர் கராகசுக்கு மேற்கே சுமார் 160 கி.மீ. தொலைவில் உள்ள மொரோன் கடற்கரைப் பகுதி அருகே, 39 வினாடி இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் 26 கி.மீ. ஆழத்தில் பதிவானது. அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டை நிலநடுக்கங்களால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், பல இடங்களில் சாலைகள் பிளந்து வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கராகசை ஒட்டியுள்ள லா குவைரா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அது ‘பேரிடர் மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கராகசின் அல்டமிரா பகுதியில் 22 மாடி கட்டிடம் ஒன்று முழுமையாக இடிந்து தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 235 பேர் உயிரிழந்ததாகவும், 4,300 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.