அ.தி.மு.க. மகளிர் அணி தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜூலை 1ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. கூட்டத்திற்கு பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகிக்கிறார்.

அறிக்கையில், மகளிர் அணியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகளில் பெண்களின் பங்கு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட கழகங்களில் உள்ள பெண் நிர்வாகிகள், பெண் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியில் உள்ள அனைத்து பெண் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பெண் நிர்வாகிகளுக்காக தனியாக நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் மகளிர் அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.