டாக்கா: வங்கதேசத்தில் இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவிருந்த முக்கிய துறைமுக சார்ந்த திட்டம் தற்போது சீனாவிடம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, மோங்லா மற்றும் சிட்டகாங் பகுதிகளில் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்காக இந்திய உதவியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பின்னர், அந்த மண்டலங்களுக்கான நில மேம்பாட்டுப் பணிக்காக ஹிராநந்தானி குழுமத்தை இந்தியா தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
2024ல் மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதற்கிடையில் இந்தியா–வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், இந்தியா தேர்வு செய்த நில மேம்பாட்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக எந்தப் பணியும் செய்யவில்லை எனக் காரணம் காட்டி கடந்தாண்டு வங்கதேச அரசு திட்டத்தை ரத்து செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலை பயன்படுத்தி சீனா மாற்றுத் திட்டத்தை முன்வைத்தது. பின்னர் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்ற நிலையில், அவர் முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்று, மோங்லா துறைமுகம் அருகே 110 ஏக்கரில் பொருளாதார மையம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். டீஸ்டா நதி மேலாண்மை திட்டத்திற்கு சீனா தொழில்நுட்ப உதவி வழங்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் தாக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால் இந்தியா கவலைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா, கொல்கட்டாவிலிருந்து சுமார் 188 கி.மீ. தொலைவில் இருப்பதால், அங்கு சீன நிறுவனங்களின் இருப்பு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் உளவு அபாயமாகவும் இருக்கலாம் என இந்தியா கருதுகிறது.





