திருப்பூர்: முதல்வர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, பல கோவில்களின் கருவறைகளில் அவரது புகைப்படத்தை வைத்து வழிபாடு நடத்தியதாக கூறப்படும் சம்பவங்களை ஹிந்து முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது.

அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 22 அன்று முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததாகவும், அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் சில இடங்களில் நடந்த கொண்டாட்ட முறைகள் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்ததாக அவர் கூறினார்.

அறிக்கையில், பழநி கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தபோது, தங்கத் தேரில் முதல்வர் விஜய் படம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் பலபட்டறை மாரியம்மன் கோவிலில் நடந்த வழிபாட்டின்போது, பூசாரியை மிரட்டி கருவறையில் அம்மனுக்கு இணையாக விஜய் படத்தை வைத்து த.வெ.க.வினர் சிறப்பு பூஜை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்த கொண்டாட்டங்களிலும், விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களின் கருவறைகளில் விஜய் படத்தை வைத்து வழிபாடு நடந்ததாக அறிக்கை கூறுகிறது. இத்தகைய செயல்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஹிந்து முன்னணி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் கட்சியினருக்கு முதல்வர் விஜய் உடனடியாக உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.