இஸ்லாம் மதத்திற்கு மாறும் ஒருவர் முஸ்லிம் மட்டுமே; இடஒதுக்கீட்டு சலுகைக்காக ‘பிற்பட்ட வகுப்பு (பிசி) முஸ்லிம்’ போன்ற உட்பிரிவு அந்தஸ்தை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. மேலும், மதம் மாறியவர்களுக்கு ‘பிசி முஸ்லிம்’ சமூகச் சான்றிதழ் வழங்க வழிவகுத்த தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர், தாம் ஹிந்து தம்பதிக்கு பிறந்த ‘பரமசிவம்’ என்றும், பின்னர் இஸ்லாம் தழுவி ‘சமீர் அகமது’ என பெயர் மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். 2015-ல் கயத்தாறு சுன்னத் ஜமாத் சான்று வழங்கியதாகவும், அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியானதாகவும் கூறினார். ‘முஸ்லிம் லெப்பை’ பிரிவுக்கான ஜாதிச் சான்று கோரி தாசில்தாரிடம் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப்பட்டதால், கலெக்டர் மூலம் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு, மதம் மாறி அடையாளத்தை மாற்றிக் கொள்வது அரசியலமைப்பின் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமை எனக் குறிப்பிட்டது. ஆனால், மதம் மாறிய பின்னரும் இடஒதுக்கீட்டு சலுகைகளைத் தொடர்ந்து கோருவது அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து தனி விவாதத்தை உருவாக்கும் என்றும், முன் தீர்ப்புகளின் சாராம்சமாக “மதம் மாறுவதற்கு முன் இருந்த ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவரின் நிலையை நிர்ணயிக்க முடியாது” என்பதையும் சுட்டிக்காட்டியது.

மேலும், 2024 பிப். 6-ல் தமிழக பிற்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை மற்றும் அதனைத் தொடர்ந்து 2024 மார்ச் 9-ல் வெளியான அரசாணை ஆகியவற்றையும் நீதிமன்றம் பரிசீலித்தது. பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட/சீர்மரபினர்/பட்டியல் ஜாதி பின்னணியிலிருந்து இஸ்லாமில் அடையாளம் காணப்பட்ட ஏழு பிரிவுகளில் ஒன்றுக்கு மாறுவோருக்கு ‘பிசி முஸ்லிம்’ சான்றிதழ் வழங்கும் முறையை சட்டபூர்வமாக்க முயன்ற அந்த அரசாணை சட்டத்தில் நிலைநிறுத்த முடியாது எனக் கூறி, அதை ரத்து செய்தது.