தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூரை டில்லி தலைமையகம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது மாநிலத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையும் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து டில்லி தலைமையிடம் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனே காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது; அமைச்சரவையிலும் இடம்பிடித்ததாக தகவல் வெளியாகியது. தவெக ஆதரவு விவகாரத்தில் கட்சிக்குள் இரு கோஷ்டி நிலை உருவானதாகவும், செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் தொடர விரும்பியதாகவும், ஆனால் டில்லி தலைமையகம் அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்ததையடுத்து திமுக கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.