இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான சீசெல்ஸ் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை 3 நாள் அரசுமுறைப் பயணமாக சென்றடைந்தார். விமான நிலையத்தில் சீசெல்ஸ் அதிபர் வேவல் ராம்கலாவன் நேரில் வரவேற்றார்; இந்திய வம்சாவழியினரும் இந்திய பாரம்பரிய நடனத்துடன் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
சீசெல்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் ஜூன் 29 அன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும், இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரும் விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, சீசெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எக்ஸ் தளப் பதிவில், விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீசெல்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க கடல்சார் கூட்டாளி மற்றும் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டார்.
பின்னர், பிரதமர் மோடியும் அதிபரும் ஒரே காரில் தேசிய தாவரவியல் பூங்காவுக்கு சென்றனர். அங்கு பிரதமர் மரக்கன்றை நட்டார். மேலும், கின்னஸ் சாதனையில் உலகின் மிக வயதான ஆமை (194) என குறிப்பிடப்படும் ‘ஜோனாதன்’ ஆமையையும் அவர் பார்வையிட்டார்.





