இரட்டை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு உதவ ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. மத்திய அரசு அறிவிப்பின்படி, இந்திய விமானப் படையின் இரண்டு ‘சி-17’ விமானங்கள் மூலம் 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மேலும் 41 பேர் கொண்ட மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஜூன் 24 அன்று தலைநகர் கராகசுக்கு மேற்கே மொரோன் கடற்கரைப் பகுதி அருகே 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகி, கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் கட்டடங்கள் மற்றும் முக்கிய அடையாளங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சாலைகளில் பெரிய விரிசல்கள் மற்றும் பள்ளங்கள் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறி, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ராணுவத்தின் கள மருத்துவமனை பிரிவு, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அவசர உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நெருக்கடியான நேரத்தில் வெனிசுலா அரசு மற்றும் மக்களுடன் இந்தியா உறுதியாக நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார். காஜியாபாத் ஹிண்டன் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட குழுவில் ராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பேர் உள்ளனர்.
அந்நாட்டில் இதுவரை 589 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளது. சிலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கத்தார், பிரேசில், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.





