தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், அதே மாலை தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா அவரை அவசரமாக சந்தித்து பேசினார்.

திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், எந்த கூட்டணி கட்சியும் தாங்களாக விலகினால் தடுக்க முடியாது என்றும், “தி.மு.க.க்கு கூட்டணியே தேவையில்லை” என்ற கருத்தை பரிசீலிப்போம் என்றும் கூறினார்.

இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் பிரேமலதா, தே.மு.தி.க. எம்.பி. சுதீசுடன் நேரில் சந்தித்தார். காலை வெளியான கருத்துக்குப் பின்னர் மாலையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது.

தி.மு.க. வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிய சூழலில், ம.தி.மு.க. விலகினாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொடரவே தே.மு.தி.க. விரும்புகிறது என்பதை பிரேமலதா ஸ்டாலினிடம் தெரிவித்தார். மேலும், சட்டசபையில் முதல்வர் விஜய் “அப்பாவை காணோம்” என பேசியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், த.வெ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் தே.மு.தி.க. பங்கேற்கும் என்றும் பிரேமலதா தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் கூறின.