ஜப்பானின் முதல் பெண் பிரதமராக உள்ள சனே தகாய்ச்சி, ஜூலை 1 முதல் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-ஜப்பான் இடையே நெருங்கிய நட்புறவு நிலவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்ததாக குறிப்பிடப்பட்டது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார நல்லுறவை வலுப்படுத்தும் 10 ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதே சந்திப்பில் இந்தியா வருமாறு ஜப்பான் பிரதமருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று, சனே தகாய்ச்சி ஜூலை 1 முதல் 3 வரை டில்லியில் நடைபெறும் 16வது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டில் இருநாடுகளின் ஒத்துழைப்பை ஆய்வு செய்வதுடன், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள உள்ளனர் என அறிக்கை தெரிவித்துள்ளது.