ஹைதராபாத்: தெலுங்கானாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் தாசில்தாருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு (ACB) போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி, வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக கூறப்படும் சொத்துகளுக்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஷாமிர்பேட்டை (ஹைதராபாத்) பகுதியில் தாசில்தாராகவும் இணை பத்திர பதிவாளராகவும் பணியாற்றும் தும்மகோமா சுசரிதா, கடந்த மாதம் 30 ஏக்கர் விளை நிலத்தை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதில் முன்பணமாக ரூ.2 லட்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சுசரிதா மற்றும் அவரது நெருங்கிய தொடர்புகளின் வீடுகள் உள்ளிட்ட நான்கு இடங்களில் ACB சோதனை நடத்தியது. இதில் ஹைதராபாதில் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு வீட்டு மனைகள் மற்றும் சித்திபேட்டை மாவட்டத்தில் 2.17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆவணங்களின் அடிப்படையில் கணக்கில் வராத சொத்துகள் ரூ.5.05 கோடி மதிப்புள்ளதாகவும், ஆனால் சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.20 கோடியைத் தாண்டக்கூடும் என்றும் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.38 லட்சம் வங்கி வைப்புத்தொகை மற்றும் இரண்டு சொகுசு கார்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது; கூடுதல் சொத்துகள் மற்றும் பினாமி பெயர்களில் உள்ள சொத்துகள் குறித்து விசாரணை தொடர்கிறது.