வரவுள்ள சட்டசபை இடைத்தேர்தல்கள் முடிந்த பின் தமிழக பா.ஜ. அமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என, பா.ஜ. தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல். சந்தோஷ் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ. சார்பில் சந்தோஷ் பங்கேற்று, ஆர்.எஸ்.எஸ். தேசிய மற்றும் மாநில தலைவர்களுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்.
இந்த ஆலோசனைகளில், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு ஏற்பட்ட தோல்வி மற்றும் அதன் பின்னணியில் உருவான சூழல் குறித்து அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ.விலிருந்து வெளியேறிய அண்ணாமலை தொடங்கிய அமைப்புக்கு சில நிர்வாகிகள் சென்றதால் கட்சியை சீரமைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பா.ஜ. நிர்வாகி தெரிவித்தார்.
அதே நிர்வாகி கூறுகையில், அண்ணாமலை அப்துல் கலாம், நல்லகண்ணு போன்ற தலைவர்களை முன்னிறுத்துவது அவர் ஹிந்துத்துவ அரசியலை முன்னெடுக்க மாட்டார் என்பதைக் காட்டுகிறது என்றும், அண்ணாமலை பக்கம் சென்றவர்கள் மீண்டும் பா.ஜ. பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக சந்தோஷ் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஆறு சட்டசபை தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம்; இந்த எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின் தற்போதைய குழப்ப நிலை தெளிவாகும் என்றும், அதன் பின்னர் தமிழக பா.ஜ.வில் மாற்றங்கள் செய்து 2029 லோக்சபா தேர்தலுக்கான தயாரிப்பை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்தோஷ் தெரிவித்ததாக தகவல்.





