மதுரை: அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரே சிலர் நீண்ட காலமாக தொடர்ந்து டெண்டர் எடுப்பதைத் தவிர்க்க டெண்டர் விதிமுறைகளை திருத்த வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 44,000 கோவில்கள் உள்ளன. அதிக வருவாய் தரும் கோவில்களிலும் அடுத்த நிலை கோவில்களிலும் பூ, பழம் விற்பனை, காலணி பாதுகாப்பு, பார்க்கிங் போன்ற சேவைகளுக்காக கோவில் நிர்வாகம் டெண்டர் விடுவதன் மூலம் வருவாய் ஈட்டுகிறது.
இந்த டெண்டர்களை அரசியல் பின்னணியுடன் சிலர் மட்டுமே தொடர்ந்து எடுத்து வருவதாகவும், கோவில் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதாகவும் புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர், தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தினார்.
வழக்கமாக ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை ஓராண்டுக்கு டெண்டர் விடப்படும். விதிமுறை திருத்தம் காரணமாக 2026–27 ஆண்டுக்கான டெண்டர் விடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் ஜூலை முதல் வாரத்தில் புதிய டெண்டர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இனி அனைத்து கோவில்களிலும் பிரசாதம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பிரசாதத்தை கோவில் நிர்வாகமே தயாரித்து வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. உதாரணமாக, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள உபகோவில்களில், மீனாட்சி கோவிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் இனி கிடைக்கும். மேலும், ஒருவேளை மட்டுமே பூஜை நடைபெறும் கோவில்களை கண்டறிந்து, இனி மூன்று வேளையும் பூஜை நடைபெற ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





