சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ, தன் மீது ‘முதல்வர் விஜயிடம் ரூ.50 கோடி பெற்றார்’ என திமுக ஆதரவாளர்கள் அபாண்டமாக பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார். சென்னை மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் இதை தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என கட்சியில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக வைகோ கூறினார். தமிழகத்தில் பாஜ ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காக ஒன்பது ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்தோம் என்றும், அரசு மற்றும் ஸ்டாலினை பாராட்டியதே தவிர விமர்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைவதற்கு திமுக ஆதரவு தரும் நிலைப்பாடு எடுத்ததாக தகவல்கள் வெளியானதாக கூறிய வைகோ, அது உண்மையெனில் அதைவிட பெரிய அரசியல் மோசடி இல்லை என விமர்சித்தார். அதிமுக தரப்பில் எதிர்ப்புகள் இருந்ததாகவும், கனிமொழி அந்த முடிவை ஏற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக ஆதரவு நாளேட்டிலும், மதிமுக முன்னாள் துணை பொதுச்செயலர் ஒருவரின் பேச்சிலும் தன் குடும்பத்தை குறிவைத்து பொய்கள் பரப்பப்பட்டதாக வைகோ கூறினார். ஓஎம்ஆரில் பல குடியிருப்புகள் கொண்ட கட்டடம் வாங்கியதாகவும், அண்ணாசாலையில் சொத்து வாங்கியதாகவும் கூறப்பட்டவை பொய்கள் என மறுத்தார். பூர்விக சொத்துகள் உள்ளிட்டவற்றை விற்றதாகவும், சொத்து விவரங்களை முன்பே வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பழி சுமத்திய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடரத் தயாராக இருப்பதாகவும், ஆதாரமின்றி அவதூறு பரப்புவோரின் பின்னணியில் சிலர் இருப்பதாகவும் வைகோ கூறினார். மேலும், இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம்; உள்ளாட்சி தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.