விருதுநகரில் சமூக நலத்துறை சார்பில் சிலம்ப விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார்.
விழாவுக்காக மேடைக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ பேனரில், ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலிடத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வராததும், துறையுடன் தொடர்பில்லாதவரின் பெயரை முன்னிலைப்படுத்தியது ஏன் என ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து மேடையிலேயே கலெக்டர் சுகபுத்ராவுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல். மேலும், தானே மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்றும், அதிகாரிகள் தொடர்ந்து இதே தவறை செய்வதாகவும் கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் இரு பெண் அமைச்சர்களுக்கிடையே உட்கட்சி முரண்பாடு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழாக்களை இருவரும் தனித்தனியாக நடத்தியதாகவும், சிவகாசியில் அமைச்சர் கீர்த்தனாவின் பேனர் கிழிக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அரசு புரோட்டோகால் அடிப்படையில் அமைச்சரவை வரிசையில் கீர்த்தனாவுக்கு உயர்ந்த இடம் இருப்பதால் அதன்படி பேனரில் பெயர் இடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





